மூடு

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம்

வழிகாட்டுதல்

கிருஷ்ணகிரியில் காந்திசாலை அப்சரா திரையரங்கத்தினருகே மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மாவட்ட அருங்காட்சியகங்கள் வரிசையில் 12 வதாக 1993ம் ஆண்டு இவ்வருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. கலை மற்றும் தொல்லியல், மானிடவியல், மண்ணியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளைச் சேர்ந்த பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நடுகற்கள் இவ்வருங்காட்சியகத்தின் முக்கிய காட்சிப் பொருட்களாகும்.

இங்குள்ள காட்சிப் பொருட்களின் வழியாக பழைய கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்படைக்காலம் மற்றும் வரலாற்றுக்காலம் என இம்மாவட்டத்தின் தொடர்ச்சியான வரலாற்றினை தெறிந்துக்கொள்ளலாம். வரட்டனப்பள்ளி, கப்பல்வாடி ஆகிய இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பழங்கற்கால கருவிகள், கத்தேரி, கங்கலேரி, தொகரப்பள்ளி, பையூர் கொக்கிக்கல்போடு, மோதூர், கொல்லஹள்ளி மற்றும் வெள்ளோலை ஆகிய இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட புதிய கற்கால கருவிகள் ஆகியவை இங்கு காட்சியில் உள்ளன.

புதிய கற்காலத்தைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் பெருங்கற்படைக்கால கலாச்சாரம் பரவியிருந்ததை இங்குக் காணக் கிடைக்கும் பல்வேறுவகையான ஈமச் சின்னங்கள், பாறை மற்றும் கல் திட்டைகளில் காணப்படும் ஒவியங்கள், இரும்பு ஆயுதம் மற்றும் கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் வாயிலாகத் தெறிந்துக்கொள்கிறோம். இவ்வருங்காட்சியகத்தில் பீமாண்டப்பள்ளியில் கிடைத்த பல்வேறு வகையான பெருங்கற்படைக்காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் காட்சியில் உள்ளன. பெரியக்கோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி மலை ஆகிய இடங்களில் உள்ள பாறை ஓவியங்கள் மற்றும் மல்லசந்தரம் கல்திட்டையில் காணப்படும் ஓவியங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பெருங்கற்படைக்காலத்தைத் தொடர்வது சங்க காலமாகும். சங்க இலக்கியங்கள் இறந்த பெருமகன்களுக்கு எடுக்கப்படும் நடுகல் குறித்து விரிவாகப் பேசுகின்றன. வீரத்துடன் போரிட்டு மாண்ட வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்டவை நடுகற்களாகும். அத்தகைய நடுகற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமாய் காணப்படுகின்றன. பீமாண்டப்பள்ளி, சூலகிரி, காத்தாடிகுப்பம், சின்னக் கொத்தூர், எமக்கல்நத்தம், கொடியாளம், லண்டன்பேட்டை மற்றும் பெண்ணேஸ்வரமடம் ஆகிய இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நடுகற்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சின்னக்கொத்தூரில் இருந்து கொண்டுவந்து இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நடுகல்லில் காட்டப்பட்டுள்ள வீரன் கருவாயன்பள்ளி என்ற இடத்தில் நடந்த போரில் ஒரு குதிரையை கொன்றுவிட்டு இறந்த செய்தியை அதே கல்லில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுத் தெரிவிக்கிறது. பீமாண்டப்பள்ளியில் இருந்து கொண்டுவரப்பட்ட வீரனுடன் அவனது மனைவியையும் காட்டியிருக்கும் நடுகல்லானது கூடுமுக்கி என்ற இடத்தில் நடைப்பெற்ற போரில் இறந்த வீரனின் மனைவி சேரமக்கன் என்பவள் தீப்பாய்ந்து உயிர்விட்டதின் நினைவாக எடுக்கப்பட்டதை அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சோழ மன்னன் ராஜமஹேந்திரனின் (கி.பி.1062) கல்வெட்டுத் தெரிவிக்கிறது. காரக்குப்பம் என்ற இடத்திலிருந்து கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள விஜயநகரர் கால கல்வெட்டு அக்ரஹாரம் ஒன்றை தானமளித்த செய்தியை குறிப்பிடுகிறது. போச்சம்பள்ளியிலிருந்து கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒய்சாள மன்னன் சோமேஸ்வரனின் 13ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மன்னனின் நலனுக்காக தாவண தண்டநாயகன் திருவனந்தீஸ்வரர் கோயிலுக்கு தானமளித்த செய்தியைத் தெரிவிக்கிறது.

பேருஹள்ளி, நெடுசால், காவேரிப்பட்டணம் மற்றும் பீமாண்டப்பள்ளி ஆகிய இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்சிலைகள் இங்கு காட்சியில் உள்ளன. கங்காதரர், பைரவர் உள்ளிட்ட மரச்சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேர்களில் இருந்து கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு காட்சியில் உள்ள நவீன ஓவியங்கள் தற்போதைய கலைத் தன்மையை எடுத்துதுக் காட்டுபவைகளாக உள்ளன.

புஜ்ஜகொண்டபுதூர் மற்றும் ஒசூரில் இருந்து கி.பி.18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு பீரங்கிகள் கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிச்சுவா கத்தி, உறையுடன் கத்தி, பீரங்கி கற்குண்டுகள், மருந்து துப்பாக்கி ஆகியவையும் இங்கு காட்சியில் உள்ளன. கிருஷ்ணகிரி, தட்டக்கல், ஜகதேவி மற்றும் மகாராஜகடை ஆகிய மலைக்கோட்டைகளின் புகைப்படங்கள் கி.பி.16ம் நூற்றாண்டு முதல் கி.பி 19ம் நூற்றாண்டு வரையிலான பாதுகாப்பு முறைகளை எடுத்தியம்புகின்றன. நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுடுமண் பொம்மைகள் கூரை ஓடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவையும் இங்கு காட்சியில் உள்ளன.

தெருக்கூத்துக் கலைப்பொருட்கள், லம்பாடி பெண்களின் ஆடை அலங்காரங்கள், இசைக் கருவிகள், இருளர் மற்றும் குரும்பர்களின் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை படம்பிடித்துக் காட்டுபவைகளாக உள்ளன.

மனித உடலியல், வரலாற்றுக்கு முற்பட்ட கால விலங்குகள், காட்டு விலங்குகள், மற்றும் சூரியக்குடும்பம் ஆகிய காட்சிப்பெட்டிகளில் மாதிரி உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விலங்குகளின் வகைப்பாடு, காலந்தோறும் உயிர்கள், எரிமலை, மாயமீன் மற்றும் புவியின் மாதிரி ஆகியவை மாணவர்களை மகிழ்விக்கும் செயல்வழி விளக்கக் காட்சிப்பெட்டிகளாகும்.

பாறை, கனிமம் மற்றும் கல்மாறி ஆகிய மண்ணியல் பொருட்கள், தாவரவியலின் மருத்துவத் தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், புதர்க்காடு, ஊர்வன, சில விலங்கு மற்றும் பறவைகளின் மண்டை ஓடுகள், பறவைகளின் இயற்கை சூழல் போன்ற விலங்கியல் காட்சிப்பொருட்கள் என பொதுமக்களை மட்டுமல்லாமல் மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளன. எனவே பொது அறிவியலோடு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு, கலை, கலாச்சார பெருமைகளை கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் எடுத்துக் காட்டுகிறது.

அமைவிடம்

 • அப்சரா திரையரங்கம் அருகில்
 • காந்தி சாலை, கிருஷ்ணகிரி
 • வெள்ளி மற்றும் இரண்டாம் சனி விடுமுறை
 • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
 • காப்பாட்சியரின் தொலைபேசி எண்: 9443442991

நுழைவுக்கட்டண விவரம்

 • பெரியவர்கள்: ரூ. 5/-
 • சிறியவர்கள்: ரூ. 3/-
 • கேமரா: ரூ. 20/-
 • வீடியோ: ரூ. 100/-
 • வெளி நாட்டினர்: ரூ. 100/-
 • பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.

புகைப்பட தொகுப்பு

 • அருங்காட்சியகம் முழுதோற்றம்
 • கிருஷ்ணகிரி அருங்காட்சியகம்
 • அருங்காட்சியகம்

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூர்

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள இரயில் நிலையம் தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகும்

சாலை வழியாக

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 5 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.