மூடு

நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம்

| துறை: கிராமப்புற வளர்ச்சி

நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் 11.10.2014ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் http://saanjhi.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் கிராமங்களில் அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, ஒருமுகப்படுத்தி, மாதிரி கிராமங்களில் செயல்படுத்தி அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராம ஊராட்சியே இத்திட்டசெயலாக்கத்தின் அடிப்படை அலகாகும். சமவெளிப்பகுதிகளில் மக்கள் தொகை 3000 முதல் 5000 வரையும், மலைப்பகுதி மற்றும் பழங்குடி கிராமங்கள் எனில் மக்கள் தொகை 1000 முதல் 3000 வரையும் உள்ள கிராம ஊராட்சியை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்ந்தெடுக்க வேண்டும். மாவட்டங்களில் இந்த அலகு அளவுக்கு மக்கள் தொகை கிடைக்கவில்லை என்றால் ஏறக்குறைய இதே அளவுக்கு மக்கள் தொகை உள்ள கிராம ஊராட்சிகளை தேர்வு செய்யலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர் தனது (அ) தனது மனைவியின் / கணவனின் சொந்த கிராமத்தை தவிர்த்து இதர கிராமங்களிலிருந்து மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டிய கிராம ஊராட்சியை தங்கள் விருப்பப்படி கண்டறியலாம். மக்களவை உறுப்பினர் தனது தொகுதிக்குள்ளும், மாநிலங்களவை உறுப்பினர் தனது மாநிலத்திற்குள்ளும், நியமன உறுப்பினர் இந்திய அளவில் எந்த ஒரு மாநிலத்திலும், ஒரு கிராமத்தைதேர்ந்தெடுக்கலாம். நகர்ப்புற தொகுதியை பொறுத்தவரையில் கிராம ஊராட்சிகள் இல்லையெனில் சம்பந்தப்பட்ட மக்களவை உறுப்பினர் அருகிலுள்ள ஊரகத் தொகுதியிலிருந்து கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டிய ஒரு கிராம ஊராட்சியை உடனடியாகவும் மற்ற இரண்டு கிராம ஊராட்சிகளை பின்னரும் தெரிவு செய்ய வேண்டும்.

முக்கியமாக, 2019 மார்ச் மாதத்திற்குள் மூன்று மாதிரி கிராமங்களை உருவாக்க வேண்டும், அதில் ஒன்று 2016க்குள் உருவாக்கப்படுதல் வேண்டும். இவ்வாறாக 2024-க்குள் 5 மாதிரி கிராம ஊராட்சிகளை (ஆண்டிற்கு ஒன்று வீதம்) தேர்வு செய்து மேம்படுத்த வேண்டும்.

அரசு தலைமை செயலாளரின் தலைமையிலான உறுப்பினர்கள் அடங்கிய மாநில அளவிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழு அரசாணை நிலை எண்.23, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அ.தி 2) துறை நாள் 13.02.2015ன்படி அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி கிராமங்களில் பல்வேறு துறைகளின் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு என தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. மேலும், புதிய உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம் தொடர்புடைய திட்டங்களும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வளங்களும் ஒரே இலக்கினை நோக்கி ஒருங்கிணைந்த வகையில் அதிகபட்ச பயன்களை தரும் வகையில் உபயோகிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் தொடர்புடைய அமைச்சகம், மத்திய அரசுத் துறைகள் / மத்திய அரசு நிதிப் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில் மாதிரி கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளில் தகுந்த மாற்றங்கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.